ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் முருகன் கோயிலில் முஸ்லிம் புலவருக்கு சிலை வைத்து சமய மத நல்லிணத்தை மக்கள் இன்றும் பேணிக்காத்து வருகின்றனர்.
இது இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது.
முஹம்மது மீர் ஜவாது புலவர் அவர்கள் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர். இவர், முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதி கங்களைப் பாடியுள்ளார். மேலும் ரகுநாத சேதுபதி, பிரம்பூர் ஆனந்த ரங்கதுரை, முத்துகிருஷ்ணன், கச்சி செல்லப்பன் உள்ளிட்ட வள்ளல்களையும் பாடிச் சிறப்பு செய் துள்ளார். ஜவாது புலவரின் முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ் இன்றளவும் தமிழக முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்களாக வாய்மொழியாகப் பாடப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்று புகழ்பெற்ற செல்ல முத்து ரகுநாத சேதுபதி மன்னரின் அரசவைக் கவிஞராகவும், அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்தவர். இவருக்கு சேதுபதி மன்னர் பரமக் குடி அருகே சுவாத்தன், வண்ண வயல் ஆகிய இரண்டு கிராமங் களை நிலக்கொடையாக வழங்கிய தற்குச் செப்பேடுகள் உள்ளன.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள குமரக்கடவுள் என்ற சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்காக புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோயிலின் விமானத்தில் அவரது சிலையை அமைத்துள்ளது சமய நல்லிணக்கத்துக்குச் சான்றாக விளங்குகிறது.
முதன்முறையாக இக்கோயில் கும்பாபிஷேகம்1926-ம் ஆண்டில் நடைபெற்றது. கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத் தின்போது, ஜவாது புலவரை கவுரவிக்கும்விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவாது புலவரின் உருவ சிலையை அமைத்துள்ளனர்.
ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நேர்த்திக்கடன் செலுத்த முஸ்லிம் பக்தர்களும் இக்கோவியிலுக்கு வருவதுண்டு.