Home கட்டுரைகள் காயல்பட்டினம் – ஓர் இசுலாமிய வணிகத்தலம்

காயல்பட்டினம் – ஓர் இசுலாமிய வணிகத்தலம்

by admin
0 comment

இன்றைய, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு அருகில் தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது காயல்பட்டினம் என்னும் பேரூர். இவ்வூரின் பழைய பெயர் காயல் என்பதாகும். பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம் என மூன்று பகுதிகளாக இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது. இவ்வூரைப்பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் எதுவும் இல்லை. ஏனெனில், சங்க காலத்தில் இப்பகுதியில் கொற்கைத் துறைமுகமே செல்வாக்குப் பெற்றிருந்தது. கொற்கைக்குத் தெற்கில் காயல்பட்டினம் அமைந்துள்ளது. காயலுக்கு தெற்கில் வீரபாண்டிய பட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் பெயரால் (கி.பி.946-966) அமைந்ததாகும். ஏற்கெனவே, காயல்பட்டினம் குறித்த சில ஆய்வுகள் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் காயல்பட்டினம் எவ்வாறு இசுலாமியரின் வணிகத்தலமாக விளங்கியுள்ளது என்பதை விளக்குவதாக அமைகின்றது.

முதன்முதலாக கி.பி.633-இல் (ஹிஜ்ரி 12) அரேபிய இசுலாமியர்கள் காயலில் வந்து குடியேறியுள்ளனர். இக்காலத்தில் முதன் முதலாகக் கடற்கரையில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அது கடற்கரை மசூதி என்றே பெயர் பெற்றது. கி.பி.633-640 காலத்தில் இம்மசூதி கட்டப்பட்டிருக்கலாம். கேரளத்துக் கொடுங்களூரிலும் இதே காலத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டது. இவ்விரண்டு  மசூதிகளுமே இந்தியாவின் தொன்மையான பகுதிகளையும் குறிப்பிடுகின்றன.

அரேபியர்களின் இரண்டாவது குடியேற்றம் கி.பி.—இல் (ஹிஜ்ரி 327) எகிப்திலிருந்து வந்த இஸ்லாமியர்களால் ஏற்பட்டது. முகமது நபியின் வழிவந்த நான்கு காலிபாக்களின் வழித்தோன்றல்களே இங்கு வந்து குடியேறினர். கி.பி.1380க்கு பின்னரே ‘காயல்பட்டினம்’ என்னும் பெயர் வழக்கிற்கு வந்தது எனலாம்.

கி.பி.342-இல் வந்தவர்களால் குத்பா பெரிய பள்ளி என்னும் மசூதி கட்டப்பட்டது. கருப்புடையார் பள்ளியில் காலத்தால் முந்திய வீரபாண்டியன் காலத்துக் (946-966) கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டில் இவ்வூர் காயல்கரை, காசிர ஊர் பவித்திர மாணிக்கப்பட்டினம் என்று பல பெயர்களில்  சுட்டப்படுகிறது.

வாசப், இபின்பதூதா, மார்க்கோபோலோ ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் காயல்பட்டினம் காயல்பட்டினம் துறைமுகத்தைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 1284-ல் காயல்பட்டினத்தில் மூன்றாவது குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது இவ்வூரில் இசுலாமிய மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். தற்போது 31 மசூதிகள் இங்கு உள்ளன.

காலத்தால் முந்திய கடற்கரைப் பள்ளிவாசலில் (கி.பி89) குலசேகரன் (கி.பி1190-1216) காலத்திக் கல்வெட்டாகும். பூவின் கிழத்தி என்னும் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டில் இப்பள்ளி வாசலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை கூறப்படுகிறது. இவ்வூரில் அப்போது வாழ்ந்த இசுலாமியர்களை சோனகர் என்றும் அவர்கள் முத்துச்சனாப வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

காட்டு மக்தூம் பள்ளிவாசல் கல்வெட்டு காயல் பட்டினத்தில் மற்றொரு பெயராகப் பவித்திர மாணிக்கப் பிள்ளார் பள்ளி என்றும் கல்வெட்டில் சுட்டப்படுகிறது. இப்பள்ளிவாசலில் உள்ள உதயமார்த்தாண்டவர்மன் காலத்துக் கல்வெட்டு (கி.பி.1387) இதனை உதயமார்தாண்ட பெரியபள்ளி என்று குறிப்பிடுகிறது. இவ்வூரின் மற்றொரு பெயராக சோணாடு கொண்டான்பட்டினம் என்று வழங்கப்பட்டதையும் கூறுகிறது. இது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் சிறப்புப் பெயரால் வழங்கப்பட்டதாகும். இத்துறைமுகத்தில் வந்திறங்கும் சரக்குகளுக்கான இறக்குமதி வரி இப்பள்ளி வாசலின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. வீரபாண்டியன் பட்டினமே சோணாடு கொண்டான்பட்டினம் என்று பெயர்மாற்றம் பெற்றதாகவும் தெரிகிறது.

கொடிமர சிறுநயினார் பள்ளி பராக்கிரம பாண்டியன் காலத்தில் கி.பி. 1514-இல் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டு இப்பள்ளியை துருக்க நயினார் பள்ளி என்று குறிப்பிடுகிறது. அர்த்தமண்டபம், இடைநாழி, பெருமண்டபம், அலம்பு நீர்வாவி ஆகிய பகுதிகள் இக்காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

கி.பி.900 முதல் 1500 வரை காயல்பட்டினத்தில் இசுலாமியர் சிறப்பான அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். மதுரை பாண்டிய மன்னர்களுடனும், இப்பகுதியின் குறுநிலத் தலைவர்களுடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டனர். அரபு இசுலாமியர்கள் நல்ல குதிரைகளைப் பாண்டியருக்கு இறக்குமதி செய்து கொடுத்தனர். அவசியமான காலங்களில் போரிலும் நேரடியாக ஈடுபட்டு உதவினர். பல நாடுகளுக்கும் இங்கிருந்து முத்து, அரிசி, மிளகு போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்தனர். காயல் இசுலாமியர்கள் தமிழிலும், அராபியிலும் நல்ல புலமை பெற்றிருந்தனர். கல்வியில் சிறந்த ஊராகவும் இவ்வூர் திகழ்ந்தது.

கி.பி. 1530-க்குப் பிறகு காயல்பட்டின இசுலாமியர்களுக்குப் போர்த்துக்கீசியர்களால் தொல்லைகள் மிகுந்தன. இப்பகுதியில் வாழ்ந்த மீனவர்களின் உதவியுடன், போர்த்துக்கீசியர் கொச்சியிலிருந்து படையெடுத்து வந்து முத்துக்குளிக்கும் தொழிலில் போட்டியை உண்டாக்கினர். கிறித்துவ மதப்பரவலும் இங்கு மோதலை உண்டாக்கியது. இருதரப்பிலும் போரினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியின் இசுலாமியர் பலரும் கீழக்கரை, பரங்கிப்பேட்டை, நாகூர், காரைக்கால், பழவேற்காடு, சென்னை, இலங்கை ஆகிய பகுதிகளில் குடியேறினர். போர்த்துக்கீசியர் முதலில் புன்னக்காயல் பகுதியில் கால் ஊன்றிப் பின்னர் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு வணிகம் செய்தனர். அதன்பின்

பகுதியில் கால் ஊன்றிப் பின்னர் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு வணிகம் செய்தனர். அதன்பின் காயல்பட்டினம் துறைமுகம் தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தது. இன்று கடற்கரையிலிருந்து சுமார் மூன்று கி.மீ தொலைவில் ஊர் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.

வகுதை

வகுதை, வகுதாரி என்ற பெயரும் காயல்பட்டினத்திற்கு வழங்கியுள்ளது. பெரிய குத்பா ஜும்மா பள்ளியில் உள்ள ஒரு கல்வெட்டு ‘பவித்திரமாணிக்கப் பட்டினம், வகுதைபுரி, காயல் அதிபர் நிலக்கிழார் மறைவிடம் கொல்லம்’ என்று கூறுகிறது. பல்சந்தமாலை என்னும் இலக்கியநூல் ‘வச்சிரநாட்டு வகுதைபுரி என்று காயல்பட்டினத்தைச் சுட்டுகிறது.

பல்சந்தமாலை

இந்நூல் கி.பி.14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியதாகும். இந்நூலிலிருந்து எட்டுப் பாடல்களை வையாபுரிப்பிள்ளை தனது களவியற்காரிகை உரையில் எடுத்தாண்டுள்ளார். அப்பாடல்களில் வச்சிரநாடு, வகுதாபுரி, அஞ்சு வண்ணத்தார், யவனர், அல்லா என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.

அஞ்சு வண்ணத்தார்

இப்பெயரில் ஒரு வணிகக் குழுவினர் தமிழகத்திலும், கேரளத்திலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கல் யார் என்பது நீண்ட நாட்கள் ஆய்வுக்குரியதாக இருந்தது. பல்சந்த மாலைப் பாடல்களின் துணைகொண்டு இவர்கல் இசுலாமிய வணிகர்களாக இருக்கவேண்டும் என சதாசிவப்பண்டாரத்தார் முதன் முதலில் கருத்துரைத்தார். அதுவே உறுதிப்படுத்தப்பட்டது. அஞ்சு வண்ணத்தார் என்பவர் பஞ்ச கம்மாளர்களாக இருக்கலாம் என்று முன்வைக்கப்பட்ட கருத்து வலுவிழந்தது.

எகிப்திலிருந்து முகமது கில்ஜியுடன் (கி.பி.850-இல்) வந்த இசுலாமியர்களே அஞ்சுவண்ணத்தார் ஆவர். ஹாசிம், பக்ரி, பருக்கி, உம்மையா, போர்வீரர் குழு ஆகிய ஐந்து இசுலாமியப் பிரிவினரே அஞ்சுவண்ணத்தார் எனப்பட்டனர். 1284-இல் ஒரு குழுவினர் இங்குக் குடியேறினர். கருப்புடையார்

பள்ளிக்கல்வெட்டில், ‘அஞ்சுவண்ணத் தொழுகை செய்’ என்னும் (கி.பி. 944-66) தொடர் இடம் பெற்றுள்ளது.

முதல் தமிழ் இசுலாமிய இலக்கியம் எனக் கருதப்படும் மிராஜ்மாலை என்னும் நூல் ஆலிப் புலவரால் எழுதப்பட்டது. கி.பி.16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது இந்நூல். இதில் ‘அண்டர் தருவெனக் கொடுக்கும் அஞ்சுவண்ண முஸ்லீம்கள்’ என்னும் பாடல் அடி இடம்பெற்றுள்ளது.

சதக் அப்துல்லா அப்பா என்னும் மிகப்பெரிய கல்வியாளர் இவ்வூரில் பிறந்து வாழ்ந்தார். இவரது அறிவாற்றலை அறிந்த ஔரங்கசீப் (கி.பி. 1707-இல்) இவரை தென்னிந்தியாவின் தலைமை அதிகாரியாக (நீதிபதி) நியமிக்க விரும்பினார். இவர் இதனை ஏற்க மறுக்கவே இவரது மகன் முகமதுலெப்பை ஆலிம் இப்பதவியில் நியமிக்கப்பட்டார். வள்ளல் சீதக்காதி இவ்வூரில் பிறந்தவர். இறுதிக் காலத்தில் கீழக்கரையில் வாழ்ந்தார்.

இவ்வாறு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் பேசப்படும் காயல்பட்டினம் இன்றும் ஆய்வாளர்களுக்குப் பல அரிய சான்றுகளைத் தந்த வண்ணம் உள்ளது. பல வெளிநாட்டுக் காசுகளும், சீன, யவனப் பானை ஓடுகளும் இப்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ளன. உலகமுழுவதும் இவ்வூர் மக்கள் வாழ்ந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்மிகத்திலும், கல்வியிலும், அயல்நாட்டு வணிகத்திலும் காயல்பட்டினம் தன் பழம் பெருமையை இன்றும் தக்க வைத்துள்ளது.

நன்றி : –
சொ.சாந்தலிங்கம்
நூல் : நாவாய் – கடல்சார் வரலாற்று ஆய்வுகள்

திருநெல்வேலி

You may also like

Leave a Comment