Home இத்திட்டப்பணிப் பற்றி

இத்திட்டப்பணிப் பற்றி

by admin
தமிழ் மரபு அறக்கட்டளை 2001ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. தொடக்கம் முதல் படிப்படியாகத் தமிழர் வரலாறு, தமிழ் மொழி சார்ந்த ஆய்வு, ஓலைச்சுவடிகள் மற்றும் பழம் நூல்கள் பாதுகாப்பு எனத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நீண்ட நாட்களாகத் தமிழகத்தின் இஸ்லாமிய விழுமியங்களையும், வரலாற்றுச் செய்திகளையும், ஆவணங்களையும் பதிவு செய்யும் ஒரு முயற்சி தொடக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இருந்து வந்தாலும் அதற்குத் தகுந்த வாய்ப்பும் கால அவகாசமும் அமையப்பெறாமல் இருந்து வந்தது. 
 
தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான வரலாற்று ஆவணப்பதிவு நடவடிக்கைகளில் தமிழக கிராமப்புற சடங்குகள், நாட்டார் தெய்வங்கள், நாட்டார் செவ்வியல் பாடல்கள், சைவ வைஷ்ண ஆலயங்களின் பதிவுகள், சமண வரலாற்றுப் பதிவுகள், கிறித்துவ தேவாலயங்கள் குறித்த பதிவுகள்,  ஐரோப்பியர்களின் தமிழக வரலாற்று ஆவணங்கள் தொடர்பான ஆய்வு, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், வாய்மொழிப்பதிவுகள், இந்திய வரலாற்றில் ஐரோப்பிய அறிஞர்களின் ஆய்வுப் பங்களிப்புகள் உள்ளிட்ட பரந்து பட்ட வரலாற்று பதிவுகளின் தொடர்ச்சியில், இப்பொழுது தமிழக இஸ்லாமியர்களின் பண்பாட்டுப் பதிவுகள் இடம்பெருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவுகள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பண்பாட்டுப் பதிவுகளில் மிக முக்கியமானது. இஸ்லாமியத் தமிழ் பற்றிய ஆவனப்பதிவு தொடர்பான  கருத்தாக்கம் கடந்த ஆண்டு வட அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஃபெட்னா 2016 நிகழ்வில் நானும் கலந்து கொண்ட போது நண்பர்கள் சிலருடன் உரையாடும் தருணத்தில் உருவானது.   அப்பொழுது உருவான இந்தக் கருத்தாக்கத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்று திரு .பாலச்சந்திரன் IAS அவர்கள் அளித்த ஆதரவும் ஊக்கமும்  இந்தத் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கப்படுவதற்கும் முதற்கட்டப்பணியை நிறைவேற்றுவதற்கும் வாய்ப்பாக அமைந்தது என்பதைப் பதிவதில் தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றது.
 
இப்பணியின் செயல்திட்டங்களை இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கினோம். இந்தத்திட்டக்குழுவில் இடம் பெறுவோர்:
 
திட்ட மேலாளர்: 
Dr.K. Subashini Ph.D, PMP®, TOGAF®9, ITILv3

 

 

 
கள ஆய்வாளர்:

​Mr.Ashok Raj, BBA, MA.Media Arts
 
 
 
வலைப்பக்க மேலாளர்: 

Mr.Selva Murali,  B.Sc, MCSE, MBA 
 
 
இப்பணியைத் தொடங்கிய வேளையில் கருத்தளவில் உதவிகள் அளித்ததோடு  தமிழகத்தின் முக்கிய இஸ்லாமிய அமைப்புக்களின் பொறுப்பாளர்களின் தொடர்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் திரு.கௌதம சன்னா அவர்கள். அவருக்கு இவ்வேளையில் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்தத் தொடர்புகளின் வழியே தான் இந்தத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றோம் என்பதை இவ்வேளையில் பதிவது அவசியம் எனக் கருதுகின்றேன்.
 
சமரஸ் இதழின் ஆசிரியர் திரு.அமீன் அவர்களின் பங்கு மிகப் பெரியது. இந்தத்திட்டத்தில் களப்பணிகளுக்காக முக்கிய நபர்களை அறிமுகப்படுத்தி வைத்ததோடு அவர்களைப் பேட்டி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். சமய நல்லிணக்கத்திற்காக செயலாற்றும் இத்தகைய அமைப்புக்களின் துணையினால் தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த முயற்சி வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிந்தது என்பதைக் குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன்.
 
மேலும் இந்த முயற்சியில் முக்கிய உதவி புரிந்தோரை இந்த வேளையில் நினைத்துப் பார்ப்பது எம் கடமை. அந்த அளவில், நெல்லையில் பதிவுகளை செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த திரு.நாறும்பூநாதன் அவர்கள், முனைவர். சௌந்தர மகாதேவன், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர், மதுரையில் திரு.செல்வம் ராமசாமி,  திரு.உதயசங்கர்(உதயன்)  மற்றும் இந்தத் திட்ட வரையமைப்பில் கருத்தாக்கத்தில் உதவிய முனைவர்.தேமொழி ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேக நன்றியைத் பதிவதில் மகிழ்கின்றேன்.
 
இஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்கள், ஆவணங்கள் போன்றவற்றின் பங்கு இல்லாமல் தமிழக வரலாற்றுப் பதிவுகளுக்கான முயற்சிகள் முழுமைபெறாது. இந்தியாவில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் அரபு, பர்சியன் கல்வெட்டுக்களும் இடம்பெறுகின்றன. உருது, அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுகட்கு மட்டும் தனித் தலைமை அலுவலகத்தை நாகபுரியில் இந்திய மைய அரசு நிறுவியுள்ளது. தொல்லியல் துறை வெளியிடும் கல்வெட்டு ஆண்டறிக்கைகளில் அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுக்களுக்குத் தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது (புலவர் இராசு, தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், பக்.5)
 
இஸ்லாமிய விழுமியங்கள் எனும் போது பள்ளிவாசல்கள், தர்காக்கள், உணவு, வாழ்வியல் சடங்குகள், மொழிவளம் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகியன முக்கியத்துவம் பெருகின்றன. தமிழில் எழுதப்பட்ட பல இஸ்லாமிய நூல்கள் உள்ளன. பிரித்தானிய நூலகத்தின் ஆசிய நூல்கள் பகுதியில் கிடைக்கின்ற தமிழ் நூல்களில் இஸ்லாமியத் தமிழ் நூல்களும் அடங்கும்.
 
தமிழ் மரபு அறக்கட்டளைத் தமிழக இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களைப் பதிந்து வைக்கும் முயற்சியை ரமலான் நோன்பின் தொடக்க நாளான இன்று தொடங்குகின்றோம். இந்தப் பதிவில் இதுவரை தமிழகத்தின் வட சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய வட்டாரங்களின் இஸ்லாமியத் தமிழ் தொடர்பில் அமைந்த வரலாற்றுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. 
 
இந்த முயற்சி ஒரு தொடக்கம் மட்டுமே. இந்தச் சிறப்புப் பக்கம் தமிழகத்தின் இஸ்லாமியத் தமிழ் தொடர்பான  வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கி மேலும் வளரும். இனி வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் மட்டுமன்றி தமிழக இஸ்லாமியர்கள் இந்தியா மற்றும் எங்கெங்கு வாழ்கின்றார்களோ  அங்குள்ள வரலாற்று செய்திகளையும் பதியும் இணையத் தளமாக இது அமைகின்றது.  
 
இந்த முயற்சியில் ஆர்வமுள்ளோர் அனைவரும் இணைந்து செயலாற்றலாம். உங்கள் ஆதரவும் செயல்பாடும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இம்முயற்சி வளரவும் ஆய்வில் ஈடுபடுவோருக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பன்மத மற்றும் பண்பாட்டுக்கூறுகளின் சிறப்புக்களை அறிந்து கொள்வதற்கும், தமிழர்களின் பல பண்பாட்டுக் கூறுகளின் ஓர்மையையும் உலகிற்க்குக் காட்டும் ஓர் அறிய முயற்சி இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.  
 
பேரா.முனைவர்.நா.கண்ணன் அவர்களின் வாழ்த்து செய்தி!
 
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
ஜெர்மனி. 25.05.2017