Home ஞானியர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி

by admin
0 comment

ஆத்மா என்பது உடல் எனும் கூண்டின் பறவை; சிப்பிக்குள் முத்து; பெட்டியிலுள்ள செல்வம்; பறவைதான் நமது நோக்கம்: கூண்டு அல்ல. முத்துதான் லட்சியம்: சிப்பி அல்ல. செல்வமே நமது கவனம்: பெட்டி அல்ல!

அதனால்- முதலில் உங்கள் ஆத்மாவுக்கு உபதேசியுங்கள்; பின்னர் பிறரின் ஆத்மாவைக் கவனியுங்கள்!

ஆன்மிக வாழ்வே சிறந்தது, சிருஷ்டிகளின் நினைவிலிருந்து அகன்று இறைவனைச் சார்ந்திருக்கும் அறவாழ்வே அது.

ஆன்மிகநல்லுரைகள் பல ஆயிரம். அவற்றைப் போதித்தார் ஆத்மஞானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி. அரிய முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். ஆன்மீகக்கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, அரும்பெரும் தவசீலர் எனப் போற்றப்படும் முஹ்யித்தீன் ஆண்டகை ஈரானின் ஜீலான் நகரில் ஹிஜ்ரி 471-ஆம் ஆண்டில் (கி.பி 1078) பிறந்தார். ஹிஜ்ரி 470 ரமலான் மாதத்தில் பிறந்தார் என்ற தகவலும் உள்ளது அவர் நபிகள் நாயகத்தின் 11வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளை.

தந்தை பெயர் ஜங்கீ தோஸ்த். தாயார் பாத்திமா இறைபக்தியும் கல்வித்திறனும் நிறைந்த தம்பதிகள் அவர்கள். கணவர் காலமாகி விட்டதால், தமது அறுபது வயதில் பெற்றெடுத்த மகன் அப்துல் காதிரை ஐந்து வயதிலேயே பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார் அன்னை. ஏழு வயதில் குர்ஆனை மனப்பாடம் செய்துவிட்ட மகனை பதினேழு வயது வரை ஜீலான் நகரில் படிக்க வைத்தார்.

பாக்தாத் நகரில் உயர்கல்வி பெற அனுமதிக்கும்படி மகன் கேட்டுக் கொண்டதால் முதுமையடைந்த தாயார் தயங்கினார். ஆனால் தடுக்கவில்iலை. எந்த நிலையிலும் நல்லதையே பேச வேண்டும் என்று அறிவுரை கூறி, நாற்பது தீனார் நாணயங்களை மகனின் சட்டைப் பைக்குள் வைத்து வழியனுப்பினார் பாத்திமா மூதாட்டி.

உண்மை சொன்ன அப்துல் காதிர்

அப்துல் காதிர் ஒட்டக வியாபாரிகளுடன் சேர்ந்து பாக்தாத் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சோதனை. காட்டுப் பகுதியில் அவரைத் திருடர்கள் சுற்றி வளைத்துக் கொண்டு, பணம் இருக்கிறதா என்று கேட்டார்கள். நாற்பது தினார் இருப்பதாக அவர் கூறியதும் சட்டைப் பையைக் கிழித்து பணத்தைப் பார்த்து வியந்தனர். உண்மையைச் சொன்னது ஏன் என்று அவர்கள் கேட்டபோது, தாயார் சொல்லித் தந்த அறிவுரை என்றார்.

கொள்ளையர்கள் நடுநடுங்கி, “தாய் சொல்லைத் தட்டாத தனயன் நீ! நாங்கள் பாவிகள்… இறைவன் எங்களை மன்னிக்க வேண்டும்!” என்று கூறிப் பணத்தை ஒப்படைத்தார்கள்.

பல ஆண்டுகள் பாக்தாத் நகரில் கல்வி கற்று ஆசிரியராகப் பணிபுரிந்த அப்துல் காதிர் ஜீலானி அன்றாடம் சொற்பொழிவாற்றி வந்தார். ஒன்றே குலம்,.ஒருவரே தெய்வம் என்ற அடிப்படையில் அமைந்த அவருடைய உரையைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் பல நகரங்களிலும் திரண்டார்கள். ஞானாசிரியர் என்று அவரைப் போற்றி நல்லாசியைப் பெற்றனர்; அவர் நிறுவிய பாடசாலை, ஞான நன்னெறிப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முஹ்யித்தீன் பட்டம் பெற்றார்

அவரிடம் கல்வி கற்றவர்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், துருக்கி, சிரியா, எகிப்து, அல்ஜீரியா, சீனா முதலான நாடுகளில் பரவி அவருடைய நல்லடியார்களாக ஞான, கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டனர்.

அவருடைய ஆன்மிகநற்பணிக்குக் கிடைத்த அங்கீகாரப் பட்டமே முஹ்யித்தீன். அப்துல் காதிர் ஜீலானி ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நடமாட்டம் இல்லாமல் துவண்டு கிடந்த ஒருவன், அவரை உதவிக்கு அழைத்தான்.

“ மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறேன். எழுந்து நிற்க சக்தி இல்லை. எனக்கு உதவி ஒத்தாசை செய்யுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான் அவன்.

பரிதாப நிலையில் அவன் இருப்பதைப் பார்த்த அப்துல் காதிர் ஜீலானி அருகில் வந்து சில வாசகங்களை ஒதி ஊதினார். உடனடியாக அவன் குணமடைந்து எழுந்துவிட்டான்.

“ நான் சாதாரண மனிதன்…‘தீன்’ என்று நாம் மதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தை உங்கள் பாட்டனார் நபிகள் நாயகம் போற்றி வளர்த்தார்கள். அந்த தீன் நெறியைப் பின்பற்றும் என்னை நமது மக்கள் ஒதுக்கிவிட்டார்கள். அந்த அவலத்தைப் போக்கி என்னை எழுந்து நடமாடச் செய்த நீங்கள் முஹ்யித்தீன்! தீன் நெறிக்கு உயிர் கொடுப்பவர்!” என்று அவன் நன்றி பாராட்டினான்..

முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி, இல்லற வாழ்க்கையைப் புறக்கணிக்கவில்லை. ஹிஜ்ரி 521-ல் நபிகள் நாயகம் அவருடைய கனவில் தோன்றி, “நீங்கள் திருமணம் செய்துகொண்டால் தான் உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடையும்!” என்று கூறியதே அதற்குக் காரணம்.

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் முஹ்யித்தீன் நாயகரைச் சிறப்பிக்கும் காவியங்களையும், இலக்கியங்களையும் படைத்துள்ளனர். சேகனா புலவர் இயற்றிய காவியம் குத்பு நாயகம் அவற்றில் ஒன்று.

நற்குல நாயக குத்பு நாயக! சற்குண நாயக தவத்தின் நாயக கற்கும் நல்லறிவாளர் கருணை நாயக பொற்புயர் நாயக புனித நாயக! என்று அவரைப் போற்றிப் புகழ்கிறார் புலவர். முகியித்தீன் புராணம் முதலான மற்ற மூன்று காவியங்களும் உள்ளன. குணங்குடி மஸ்தான் சாகிபு சதகம் பாடியிருக்கிறார். மற்ற புலவர்கள் பல பிரபந்தங்களை இயற்றியுள்ளனர்.

பயனற்ற பேச்சுகளை விட்டுவிடுங்கள்

இரவுபகலாக ஓய்வின்றி ஆன்மிகத் திருப்பணியாற்றிய அப்துல் காதிர் ஜீலானியின் நல்லுபதேசங்கள் பல நுால்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவருடைய 68 சொற்பொழிவுகளின் தொகுப்பு நுால் ‘பதஹுர் ரப்பானி’, 1150-ம் ஆண்டில் (ஹிஜ்ரி 545) வெளியிடப்பட்டது, “ குர்ஆன் போதனைகளின் அடிப்படையில் நீங்கள் செயல்படுவது இறைவன் அல்லாஹ்வின் அருகே உங்களை நிறுத்தும். நபி நாயகரின் வழியில் செயல்பட்டால் நபியின் அருகில் உங்களை நிறுத்தும். பயனற்ற பேச்சுகளை விட்டுவிடுங்கள். இன, மதவெறியை விட்டு விலகி விடுங்கள்!” என்று அதில் போதித்துள்ளார்.

அப்துல் காதிர் ஜீலானியின் 78 ஞானச் சொற்பொழிவுகளின் தொகுப்பு நுால் ‘புதுஹுல் கைப்’. ஒன்று பரம்பொருள் எனும் ஏகத்துவ இறைக் கொள்கையை இந்த நுால் எடுத்துரைக்கிறது.

இஸ்லாமியச் சட்ட திட்டங்கள், செயல்முறைகளை விவரிக்கும் மற்றொரு நுால் ‘குன்யதுத் தாவிபீன்’. அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால் கஸீதத்துல் கவ்தியா.

பல மொழிகளில் அவருடைய நல்லுரைகள் வெளிவந்துள்ளன .

“இறைவனுக்கு அஞ்சுங்கள். அவன் உங்களுக்கு அளித்திருக்கும் பாக்கியங்களுக்காக நன்றி செலுத்துங்கள். துன்ப காலத்தில் பொறுமையுடனும், இன்ப காலத்தில் நன்றியுடனும் இறைவனுக்கு இணங்கி நடந்து கொள்ளுங்கள். உங்கள் பாவங்களுக்காக, அவனிடம் மன்னிப்பு கேளுங்கள்!”.

“புறம் பேசாதீர்கள்! நெருப்பு விறகை எரிப்பதைப் போல் அது உங்கள் நன்மைகளைத் தின்று விடுகிறது. பொய்,புறம் கூறுவதைக் கைவிட்டவன் பாவங்களிலிருந்து மீட்சி பெறுவான். புறம் பேசுவதால் புகழ் பெற்றவன் தனது கண்ணியத்தை இழந்தவன் ஆவான்!”

மெய்ஞ்ஞான சூரியன்-ஷம்சுல் மஃரிபா- என்ற சிறப்பைப் பெற்ற முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி தமது உடல்,பொருள்,ஆவி அனைத்தும் மக்களுக்காவே என்ற அர்ப்பணிப்புடன் நாற்பது ஆண்டுகள் ஞானத் திருப்பணியாற்றினார். 90 வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் மாதம் பிறை பதினொன்றில் (கிபி 1160) அவர் மறைந்தார். அவருடைய அடக்கஸ்தலம் பாக்தாதில் அவர் பணியாற்றிய மதரஸா கல்விக்கூட வளாகத்திலேயே அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment