Home ஞானியர் ஞானியர் – ஆரிபு நாயகம்

ஞானியர் – ஆரிபு நாயகம்

by admin
0 comment

அருமை பயக்கும் சுல்தானுல்

ஆரிபின் எம்பெருமானார்

இருமை பயக்கும் மலர்த் தாட்கள்

இரண்டும் இரண்டு கண்மணியே!

ஆரிபு நாயகம் பற்றிய தமிழ்க் காவியப் பாடல் இது. கண்ணின் மணியாக, அருட்செல்வராக இறைநேசர் சுல்தானுல் ஆரிபீன் சையிது அஹமது கபீரை காவியம் போற்றுகிறது. ஏகத்துவ இறையொளியை ஏற்றிவைக்கும் திருப்பணிச் செல்வராகத் திகழ்ந்த அவரைச் சிறப்பிக்கும் 43 படலங்களும் 2373 பாடல்களும் நாகூர் குலாம் காதிறு நாவலர் இயற்றிய நாயகம் இக்காவியத்தில் இடம் பெற்றுள்ளன. மகான் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைப் போல் முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் வாழும் உத்தமராக மதிக்கப்படுகிறார் இவர்.

ஞானச்செல்வர் சையிது அஹ்மது கபீர் ரிபாஃயி, நபிகள் நாயகம் அவர்களின் பாரம்பரியத்தில் 19-ம் தலைமுறையினரான அபுல்ஹஸன் அலீயின் புதல்வர் ஆவார். தாயார் பாத்திமா அம்மையார், ஹிஜ்ரி 512-ம் ஆண்டு, ரஜப் மாதம் ஈராக்கின் பதாயிகு நகரில் சையது அஹ்மது கபீர் பிறந்தார்.

தாயார், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது தொழுகை முடித்துவிட்டுப் பாயில் அமர்ந்திருந்தார். அப்போது தமது வயிற்றைப் பார்த்தபடி பேசினார். ஸலாம் கூறியபடி, “என் அன்பு மகனே!” என்று அழைத்தார். உடனடியாக அதற்குக் கருவிலிருந்து ‘ஸலாம்’ தெரிவித்து பதிலும் வந்தது. அவருடைய சகோதரர் தங்கையின் விநோத உரையாடலைக் கேட்டு வியப்படைந்தார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாற்பதாம் நாளில் சையிது அஹ்மது கபீர் பிறந்தார்.

நாலரை வயதில் செய்கு அலீ என்ற பெரியாரிடம் கல்வி கற்கத் தொடங்கிய அவர் பத்து வயதுக்குள் பலதுறைக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஏழு வயதிலேயே குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டார், அதற்குப் பிறகு ஆன்மிகச் செல்வர் வாஸித்தியிடம் ஷரீஅத், தரீகத், ஹகீக்கத், மரிபத் ஆகிய சமயக் கல்விகளைக் கற்று ‘அபுல் அலமைன்’ பட்டத்தைப் பெற்றார்.

பிற உயிர்களிடம் பேசும் ரகசிய ஞானம்

இறைநேசர் சையிது அஹ்மது கபீர் ரிபாஃயி இளமையிலேயே இறைஞான ஈடுபாட்டுடன் திருப்பணிளைத் தொடங்கினார். அதனால் 28 வயதிற்குள் மிகப் பிரபலமான பெருமகனாகிவிட்டார். தனித்திருந்து இறை தியானத்தில் ஆழ்ந்து மெய்ஞ்ஞானப் பெருவள்ளலாய் விளங்கிய ரிஃபாயி நாயகர், மக்களுக்கு நல்லுபதேசம் வழங்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அந்த வயதிலேயே ஆயிரக்கணக்கான சீடர்களைப் பெற்றிருந்தார். பெருஞானியாகக் கருதப்பட்ட அவர் பிற உயிர்களிடம் பேசக்கூடிய ரகசிய ஞானம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.

உடலும் உயிரும் வெவ்வேறு திசையிலும் தன்மையிலும் இருப்பவை அல்ல என்பதை வெகு இயல்பாக விளக்கியுள்ளார் ஆரிபு நாயகர். ‘கனவிலே அல்லாஹ்வை முகக் கண்ணால் நான் கண்டேன். விழித்திருக்கும்போது அவனை அகக் கண்ணால் பார்த்தேன்!’ என்று கூறியுள்ளார்.

சுல்தானுல் ஆரிபீன் ஆனார்

ரிஃபாய் அவர்கள் புனித மக்காவுக்குச் சென்று அதற்கு அருகில் அமைந்துள்ள அரபாத் மலைப்பகுதியில் 40 நாள் தங்கியிருந்தார். உணவு உறக்கமில்லாமல் இறைவனின் நினைவிலேயே அவர் ஆழ்ந்திருந்தார். ஒருநாள் எதிர்பாராத பெருவியப்பு, இறைவன் அல்லாஹ் அவருடைய தியானத்தின் மீது மகிழ்ச்சி அடைந்து, “சுல்தானுல் ஆரிபீன்” எனும் பெயரிட்டு அழைத்தான். பிறகு அவருக்குப் பல அகமிய ரகசியங்களையும் வெளிப்படுத்தினான்.

அடுத்த கட்டமாக நபிகள் நாயகம் காட்சியளித்து ஸலாம் நல்லாசி வழங்கி, ‘‘புதல்வரே! நீங்கள் இன்றிலிருந்து ‘சுல்ஆரிபீன்’ ஆனீர். மேலும், ‘மஹ்பூபு ரப்பில் ஆலமீனும்’ ஆனீர்!” என்று கூறி அவருடைய நெற்றியில் முத்தமிட்டார்கள். பிறகு, “இறைவனே! இவருக்கு உன் அன்பையும், அறிவாற்றலையும் அதிகரிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

31 ஆண்டுகள் வனவாசம்

ரிஃபாயி அவர்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி பெயர் செய்யிதா கதீஜா. அபூபக்கர் அன்சாரி புகாரியின் மகளான கதீஜா மூலம் ஆண்டகைக்கு ஃபாத்திமா, ஜெய்னம்பு என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன. கதீஜா காலமான பிறகு அவருடைய தங்கை சையிதா ராபியாவை ரிஃபாயி துணைவியாக்கிக் கொண்டார். அவர் மூலம் பிறந்த சையிது குத்புதீன் சாலிஹ் என்ற மகன் பதினேழாவது வயதில் காலமாகிவிட்டார்.

மக்கள் தொடர்பிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருக்க விரும்பிய ஆரிபு நாயகர் சில முறை வனவாசம் செய்தார். மொத்தம் 31வருடங்கள் காட்டிலேயே அவர் தங்கியிருந்தார். ரிபாஃயி நாயகர் ஒரு வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில், தனித்திருந்து யோகநிலையில் இருந்த போது வானவர் சம்சயீல் தோன்றி, விண்ணகப் பயணத்திற்கு அழைத்துச் சென்றார்.

முதுமைக் காலத்தில் அவருக்கு இசைமீது விருப்பம் ஏற்பட்டது. அதனால் இசை எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தாலும் அதனை ரசிப்பது ஏற்புடையது என்று அவர் கூறிவந்தார்.புலன் இயக்கம் ஓய்ந்துவிட்டாலும் ஓசை இன்பத்தில் கரைந்து உற்சாகம் பெறலாம். மனக் கரையைப் போக்கும் அம்சங்களில் இசையும் ஒன்று என்றார்.

662 கிரந்தங்கள்

ஆரிஃபு நாயகர் தமது இரண்டாவது வனவாசத்திற்குப் பிறகு எழுத்துப் பணியில் ஈடுபட்டார் 662 கிரந்தங்களை அவர் எழுதியதாக ருமூஜுல் ஃபுகரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஆன்மிக ஞானத் துறை சார்ந்தவை. தப்ஸீர் சூரத்துல் கத்ர், இல்முத் தப்ஸீரேன், ஹதீஸ், அத்தரீகு இலாஹி, மஃஅல்லா, ஹிகம் ஆகியவை அந்த நுால் பட்டியலில் அடங்கும்.

ஞானச் செம்மல் ஆரிபு நாயகம் சையது அஹமது கபீர் 66 ஆண்டு காலம் வாழ்ந்தார். ஆன்மிகச் சுடரொளியைப் பரப்பிய அவர் ஹிஜ்ரி 578 ஜமாத்துல் அவ்வல் பிறை 22 பிற்பகலில் (கி.பி.1183 செப்டம்பர் 23) இறை நாட்டப்படி உயிர் துறந்தார். மறுநாள் அவருடைய நல்லுடல் பிறந்த ஊரான பதாயிஹ்வில் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது (78 வயது வரை ஆண்டகை வாழ்ந்தார்கள் என்ற தகவலும் உள்ளது).

ஆரிபு நாயகர் அடங்கியிருக்கும் நகரின் பெருமையை எடுத்துரைக்கும் பதாயிகு கலம்பகத்தை குலாம் காதிறு நாவலர் 1900-ல் இயற்றினார். 101 பாடல்கள் அதில் உள்ளன. அசனா லெப்பை புலவர் ரிஃபாயி ஆண்டகையின் புகழையும் பதாயிகு நகரின் சிறப்பையும் விவரிக்கும் பதாயிகு பதிற்றுப் பத்து அந்தாதியை 1890-ல் இயற்றினார்.

நபிகள் நாயகம் அவர்களின் வழியில் மார்க்க, சமூக நற்பணியாற்றி வந்த ஞானச்செம்மல் சுல்தானுல் ஆரிபீன் சையது அஹமது கபீர் ரிஃபாயியைச் சிறப்பிக்கும் நினைவு விழா நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன். அவர் பெயரில் ரிஃபாயி தரீக்கா சங்கம் பல நாடுகளில் இயங்கி வருகிறது

 

https://goo.gl/S8JCyw

You may also like

Leave a Comment